அக்டோபர் 19, 2011

ஒரு பல்பு ஸ்டோரி.

machi (கூகுள் டாக்கில் பாப் அப் வந்தது.)

என்னடா?

அவ கிளம்பிட்டாடா.

என்னாது, இவ்ளோ சீக்கிறாமாவா??

ஆமா டா.

இன்னைக்கு கால் ஏதும் இல்லையா?

தெரியலை மச்சி

சரி விடு மச்சி நான் பாத்துகறேன்.

அன்றைய நாளுக்கான எக்ஸிட் பார்மாலிட்டீஸை அவசரமாக முடித்துவிட்டு, லிஃப்ட் லாபியில் கீழ் செல்லும்
பட்டனை அழுத்திவிட்டு லிஃப்டுக்காக காந்திருந்தான். சிறிது நேர காத்திருக்குப்பின் திறந்த லிஃப்டினுள் அவள் மட்டும் இருப்பதை கண்டு, இந்த தனிமையை பயன்படுத்தி அவளுடன் பேசிவிடலாம் என்று எத்தனித்த பொழுது இதேபோல் வேறொரு சமயத்தில் அவளிடம் வாங்கிய பல்பு நினைவுக்குவர, ‘-1’ ஃப்லோர் பட்டனை அழுத்திவிட்டு அமைதியாக நின்றான்.

பார்க்கிங்கிலிருந்து மெதுவாக வெளியே வந்த அப்பாச்சி, DLF கேம்பசிலிருந்த ஸ்லோ மூவிங் ட்ராஃபிக்கில் ஸ்கூட்டியை ஃபாலோ செய்ய ஆரம்பித்தது. இந்த ட்ராஃபிக்கில் எவனாவது அவளை கீழே தள்ளிவிடனும் நாம போய் அவளுக்கு ஹெல்ப பண்ணனும் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டான்.அவளை கீழ தள்ளிவிட்டவனுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் ஒரு 1 லட்சம், இல்லைனா ஐம்பதினாயிரம், ச்சே ச்சே நம்ம பசங்களுக்கு ஒரு ஃபுல் வாங்கிக்கொடுத்தாலே போதும் அடிபடமா கீழே தள்ளிடுவானுங்க என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே வண்டிகள் DLF கேம்பஸை தாண்டிவிட்டதை உணர்ந்தான்.

இன்னும் கொஞ்ச தூரம்போனா ஒரு ‘யூ’ டர்ன் இருக்கும், அதுல ‘யூ’ டர்ன் எடுத்து அவகூட கொஞ்சதூரம் போகவேண்டும் என்று முடிவு செய்தான். எவனும் அவளை கீழேதள்ளாமல் விட்ட வருத்ததோடே ‘யூ’ டர்ன் எடுக்கும்போது மழையினால் ஊறி இருந்த ’தார்’ ரோடு செய்த சதியால்...


டமால்ல்ல்..

எக்ஸ்க்யூஸ் மீ, ஆர் யூ ஆல்ரைட்..

செப்டம்பர் 27, 2011

பண்புடன் ஏழாவது வாசகர் வட்டம்

’கூட்டாஞ்சோறு’, உண்மையில் எங்களின்(வில்லன்,உதயன் மற்றும் நான்) வாசகர் வட்டம் இங்குதான் தொடங்கியது. கம்மங்கூழும், கேப்பைகூழும் குடித்துக்கொண்டே ’ஜே.ஜே சில குறிப்புகள்’ புத்தகத்தின் விமர்சனம் இங்குதான் ஆரம்பித்தோம். பின்னர் வந்த பன்னீர் ஃபரைட் ரைசையும், பிரிஞ்ச் சாதத்தையும் சாப்பிட்டு முடிக்கும்போது மணி சரியாக 3.45ஐ தொட்டிருந்தது, கிளம்பலாம் என்று முடிவு செய்தபோது வில்லனே பெருந்தன்மையாக கூழுக்கும் வெரைட்டி ரைசுக்கும் ஸ்பான்சர் செய்து விட்டு டெசர்ட்டாக ஃபேண்டாவையும்,லிம்காவையும் வாங்கி கொடுத்த பாங்கைகண்டு நானும் உதயனும் வியந்தோம்.

சரியாக 4.50 மணிக்கு விழியன் அண்ணன் வீட்டினுள் நுழைந்தோம் எங்களை கண்டதும் குழலி அவளுடைய பொருட்களை எல்லாம் பத்திரப்படுத்த ஆரம்பித்தாள் (என்னை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பாள் போல). நாங்கள் சாப்பிட்ட கூழ் பற்றி சொன்னதும் விழியன் அண்ணனின் வாட்டர்ஃபால்ஸ் தானாக கொட்டியது, மறுநாள் அந்த ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்ததை அவரின் முக அசைவுகள் காட்டிக்கொடுத்தது. இடையிடையே போன் செய்து தன் வரவை உறுதி செய்து கொண்டிருந்தான் மோர், அவன் ஐயப்பன்தாங்கல் வந்ததும் அவனை அழைத்து வர போவதாக சொல்லிக்கொண்டிருந்த உதயன், கடைசி வரையில் அவனை அழைத்து வராமல் விட்டது ஏன் என்று புரியாத புதிராகவே உள்ளது. அவன் வந்ததும் வில்லனை, நிலாரசிகன் என்று சொல்லி வரப்போகும் அடிதடியை தற்காலிகமாக தடுத்து நிறுத்தலாம் என்று நானும் விழியன் அண்ணனும் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும்போதே உதயன், வில்லனை வில்லன் என்றே அறிமுகப்படுத்தி எங்கள் முயற்சியை தூளாக்கினான். மோரின் சாந்தகுணத்தால் அங்கு நடக்க இருந்த அடிதடி முடிவுக்கு வந்தது (தேங்க்ஸ் டூ மோர்). பிறகு அருகிலிருந்த கடையில் டீ சாப்பிட்டு கொண்டிருக்கும்போது சாஃப்ட்வேர் இஞ்சினியர் எந்த உடை அணியவேண்டும் என்று உதயனும், மோரும் பின்நவீனத்துவம் சார்ந்த விவாதத்தில் ஈடுபட இறுதியில் உதயன், மோரிடம் சரணடைந்தான்( மோர் ராக்ஸ்)...

5.45 மணியளவில் முதல் சுற்று ஆரம்பம் ஆனது, எங்கேயும் எப்போதுமில் தொடங்கி வில்லனின் எழுத்தாற்றலும் அதனை சார்ந்த விமர்சனத்தையும் கடந்து ஒரு வழியாக சாப்பாட்டு வட்டம் தொடங்கியது, சண்முகத்தை அழைத்து வர உதயன் சென்றதை கண்டு (அவனை மட்டும் மெயின் ரோட்டுக்கே போய் அழைத்து வந்தான்) அனைவரும் நிம்மதி பெருமூச்சுடன் சாப்பிட ஆரம்பித்தனர். வந்ததே சாப்பிடத்தான் என்பது போல வில்லனும்,நந்தாவும் இடியாப்பத்தை பிரித்து மேய அவர்களுடன் போட்டி போடுவது போல் நரேஷும்,மோரும் வெஜ்பிரியாணியை வெளுத்துவாங்கிக்கொண்டிருந்தனர்( மோர் ஆல்வேஸ் ராக்ஸ்). முதன்முதலாக இடியாப்பத்தை சாப்பிடுவதாலோ என்னவோ நான் இரண்டு இடியாப்பத்துடன் முடித்துக்கொண்டேன்.வந்தவேலை செவ்வனே முடிந்ததும் மோர் கிளம்பினான் அவனை மெயின் ரோட்டில் விட்டுவிட்டு சிலபல இனிப்புகள் வாங்கிக்கொண்டு இரண்டாம் சுற்றை நோக்கிய என் பயனத்தை தொடங்கினேன்(வரலாற்று குறிப்பு எழுதும்போது இப்படிலாம் எழுதவேண்டி இருக்கு).

அப்பாவின் கணக்குகளையும், அம்மாவின் அபாகஸ் வகுப்பையும் வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அடுத்த சுற்றை சண்முகத்தின் அறிமுகத்தோடு ஆரம்பித்தோம். ப/பிடித்த சிறுகதைபற்றிய சிறு குறிப்புகளை பகிர்ந்து கொண்டிருந்த வட்டம் நந்தாவை அடைந்தது. நந்தா, ‘தரையில் இறங்கிய விமானங்கள்’ என்ற நாவலைப்பற்றிய விமசர்னத்தை விலாவரியாக கூறி முடிக்கும்போது அந்த நாவலையே படித்து முடித்த ஒருவித திருப்தி அனைவர் முகத்திலும் தெரிந்தது. இரண்டாம் சுற்று வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் விதமாக அடுத்த சுற்றுக்கு (சாப்பிடத்தான்) அனைவரும் தயாரானோம். நள்ளிரவு சுமார் 12.30மணிக்கும் நாங்கள் ஃபார்மில்தான் இருப்போம் என்பதை அனைவரும் நிருப்பிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதால் மிச்சம் மீதி இருந்த அனைத்து ஐட்டங்களையும் காலி செய்து எங்கள் நிலையை நிரூபித்தோம்.

மூன்றாம் சுற்றுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் மொட்டைமாடி. அங்கு தொடர்ந்த மூன்றாவது சுற்றில் திரைபடங்கள் பற்றியும், அதில் வரும் கதாபாத்திரங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. கேமியோ கேரக்டருக்கு உதாரணமாக ‘மெளவுன ராகம்’ கார்த்திக்கை சொல்லி இதே போல் வரும் கேமியோ கேரக்டரை வரிசை படுத்த முயற்சி செய்த நிலாரசிகன் இறுதியில் கேமியோ கேரக்டரின் வரையரை என்ன என்ற அளவிற்கு விவாதம் திசைதிரும்ப அதை பாதியிலே விட்டுவிட்டு அடுத்த கேரக்டருக்கு தாவினார். பெஸ்ட் டயலாக், காமெடி என்று பல கட்டங்களை கடந்த இந்த விவாதம் இறுதியில் நிலாரசிகனின் மிமிக்ரியுடன் முடிந்தது.

வாசகர் வட்டம் என்பதைத்தாண்டி உறவுகளுடன் அன்யோன்யத்துடன் பழக கிடைத்த ஒரு வாய்ப்பாக இருந்தது. இதை சிறப்புடன் ஆர்கனைஸ் செய்த விழியன் அண்ணனுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. இடியாப்பத்தை முதல்முதலாக சாப்பிட வாய்ப்பு கொடுத்த திவ்யா அக்காவிற்கும் அம்மாவிற்கும் ஸ்பெஷல் நன்றி..

செப்டம்பர் 21, 2010

எந்திரன் விமர்சனம்

தலைப்பை பார்த்ததும் எந்திரன் படத்தோட கதை விமர்சனம்னு நினைச்சிடாதீங்க, இது எந்திரன் படத்தினை பற்றிய ஒரு விமர்சனம் அவ்வளவேதான்.

சமீபகாலமா பதிவுலகத்தில எந்த பதிவரோட பக்கதுக்கு போனாலும் கண்டிப்பா எந்திரன பத்தி ஒரு இடுகை இருக்கு. நாமளும் ஒரு பதிவு எந்திரன பத்தி போட்டுடனும்னு பயங்கரமா மூளைய கசக்கிட்டிருக்கும் போது துரை ஐயாவிடமிருந்து வந்த இந்த தொடர் பதிவுக்கான அழைப்பு கும்பிட போன தெய்வம் குறுக்கால வந்த மாதிரி இருந்தது.

இனி எந்திரனை பற்றி என் பார்வை,

வெறும் வாயையே மூனு மணி நேரம் மெல்லுர சில பதிர்வர்களுக்கு எந்திரன் பத்தி தினமும் டாப்பிக் கிடைச்சா சும்மாவா விடுவாங்க. அரையோ அரைனு அரைச்சமாவையே திரும்ப திரும்ப அரைச்சு தினமும் ஒரு பதிவ போட்டு ஹிட்ஸ் பார்த்திடறாங்க. இதுல ஒரு சிலர் எந்திரன் எடுத்த பணத்தில அத பண்ணியிருக்கலாம், இத பண்ணியிருக்கலாம்னு ப்ரொடியூசருக்கு அட்வைஸ் வேற.

டீ.வி, எஃப்.எம், பேப்பர்னு எங்க பாத்தாலும் எந்திரன் ஜுரமாவே இருக்கு, இதுல அமெரிக்காவுல புக்கிங் ஆரம்பிச்ச 10 நிமிஷத்துல எலலா டிக்கெட்டும் வித்து போச்சுனு ஃப்ளாஷ் நியூஸ் வேற போட்டு பதிர்வர்களுக்கு டாப்பிக்க அள்ளி கொடுக்கிறார் எந்திரன். ஆனாலும் ரஜினி ரசிகரல்லாத பல பதிவர்கள் எந்திரனுக்காக நடு நிலமையோடே எழுதி வருவது ஆறுதலை தரும் விஷயம்..

இலவச விளம்பரங்களுக்காக எந்திரனை தகர்தெறிய காத்திருக்கும் அரசியல்வாதிகளின் ப்ரவேசம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, ஒருவேளை இது சன் பிக்சர்ஸ் படம் என்பதால் அடக்கி வாசிக்கிறார்களோ இல்லை படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்களோ. எது எப்படியோ இந்த அரசியல் கோமாளிகளாலும் எந்திரனுக்கு ஒரு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

அதே நேரத்தில், அதிக எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த பல படங்கள் வந்த சுவடு தெரியாமல் பெட்டிக்கு சென்றதையும் எந்திரன் ஆதரவாளர்கள் புரிந்து கொண்டு அவர்களும் அளவிற்கு மீறாமல் பார்த்து கொண்டால் எந்திரனுக்கு நல்லது.

எந்திரனின் விளம்பரங்களும்,ஆர்ப்பாட்டங்களும், ரஜினியை பற்றி எந்தவித அபிப்பிராயமும் இதுவரை இல்லாமல் இருந்த என்னைப்போல ஒரு சிலருக்கு கூட, அப்படி என்னதான் இந்த படத்தில இருக்கிறதென்று பார்த்திட வேண்டும் என்று தோன்ற வைத்தது உண்மைதான்.
இதுவே அந்த தாயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஏன் ரஜினிக்கே கூட வெற்றிதான்.

என்னையும் மதித்து, நம்பி என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த துரை ஐயாவுக்கும், அவரை அழைத்த சேட்டைக்கும் நன்றி.
(மக்களே எது திட்டுறாதா இருந்தாலும், என்னய மட்டும் திட்டாதீங்க இவிங்க ரெண்டு பேரையும் சேத்து திட்டுங்க)

தொடரைத்தொடர சிட்டுக்குருவி கவிதாவையும், தமிழையே சுவாசிக்கும் சா.கி ஐயா அவர்களையும் அழைக்கிறேன் .

ஜூலை 16, 2010

விளை(லை) நிலம்

எல்லாரும் சரின்னு சொல்லிட்டாங்க சுப்புரமணி இனி நீதான் பாக்கி, எல்லாரும் கொடுத்ததுக்கபுறம் நீ மட்டும் நடுவில அந்த மூனு ஏக்கர வச்சு என்ன பண்ண போற சரின்னு சொல்லு ஒரு நல்ல விலைக்கு முடிச்சிடலாம் என்ற ப்ரோக்கர் பழனியின் பேச்சில் சற்றே தடுமாறினான் சுப்புரமணி. பரம்பரை பரம்பரையா சோறு போட்ட நிலமாச்சே அத போய் எப்படிய்யா கொடுக்கறது தயங்கிய படியே கேட்டாள் சுப்புரமணியின் மனைவி கண்ணம்மா.

இதப்பாரு கண்ணம்மா உனக்கு தெரியாதது ஒன்னுமில்ல, மூனு வருஷமா மழை இல்ல, கினத்திலயும் தண்ணி வத்தி போய் பல காலம் ஆகுது இந்த நிலமையில இந்த நிலம் உனக்கு சோறு போடும்னு நீ இன்னும் நினைக்கிறியா. உம்பையனும் மெட்ராஸ்ல ஏதோ கம்பியூட்டருக்கு படிக்கிறான் அவன் காலத்துல அவன் இந்த பட்டிகாட்டுக்கு வந்து நிலத்த உழுது விவசாயம் பண்ணபோறானா? உங்க காலத்துக்கப்புறம் இத பாத்துகிறதுக்கு ஆளில்லை. இப்பவே வந்த விலைக்கு இத வித்துட்டு உன் பையன் படிப்பு செலவுக்கு நீ வாங்கின கடன அடைச்சிட்டு மீதி இருக்கிற காசுல நீங்க நிம்மதியா வாழலாம். பழனி கூறுவதில் உண்மை இருப்பதாகவே அவர்களுக்கு பட்டது.

என்ன இருந்தாலும் இது பரம்பரை சொத்து எதுக்கும் என் பையன்கிட்ட ஒரு வார்த்தை என இழுக்கும்போதே பழனி குறுக்கிட்டான், உன் பையன் என்னையா சொல்ல போறான் அவன் படிச்சி முடிச்சதும் ஏதாவது ஒரு வெளிநாட்டு கம்பெனில வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள் வேலை செஞ்சிட்டு அப்புறம் வெளி நாட்டுக்கே போய் செட்டில ஆகிடபோறான் அவனுக்கு இந்த நிலத்த கொடுக்கிறதால எந்த வருத்தமும் இருக்காது. மீண்டும் ஏதோ பேச முயன்றவனை தடுத்து, முழுசா மூனு லட்சத்துக்கு முடிச்சி தறேன் போதுமாய்யா என்று மூளை சலவையை முடித்தான். சில ஆயிரங்களை எதிர்பார்த்தவனுக்கு பல லட்சம் கிடைக்க போவதை என்னி முழு மனதோடு சம்மதித்தான்.

வர வெள்ளிக்கிழமை ரிஜிஸ்டர் வச்சிருக்கேன், அன்னிக்கு பாபனாசம் ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு 10 மணிக்கெல்லாம் வந்திடு, அப்புறம் உன் பையனையும் வர சொல்லிடு பரம்பரை சொத்து அவனும் கையெழுத்து போடனும் இல்லைனா வில்லங்கமாகிடும், சரி இத செலவுக்கு வச்சுக்கோ என்று ஒரு நூறு ரூபாய் தாளை கையில் திணித்து விட்டு கிளம்பினான் பழனி.

ஹலோ வினோத்து நா அப்பா பேசுறேன் டா, எப்படி இருக்க.
நான் நல்லா இருக்கேன் பா, நீங்களும் அம்மாவும் எப்படி இருக்கீங்க.

நாங்க நல்லா இருக்கோம் டா, நீ ரொம்ப நாளா பைக் வேனும்னு கேட்டுட்டிருந்தியே கைல கொஞ்சம் பணம் வந்திருக்கு, வர வெள்ளிக்கிழமை நல்ல நாளு, அன்னிக்கே ஒரு நல்ல பைக்கா பார்த்து எடுத்திடலாம்.
சரிப்பா நான் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்திடறேன்பா.

எப்படியோ பையனை வெள்ளிக்கிழமை ஊருக்கு வர சம்மதிக்க வச்சிட்டோம், அவன் போகும்போது சொன்ன மாதிரியே அவனுக்கு ஒரு பைக் வாங்கி கொடுக்கனும் என்று சுப்புரமணியும், பல்சர் 150cc கனவுகளோடு வினோத்தும் போனை துண்டித்தனர்

மச்சி அப்பா ஊருக்கு வர சொல்லியிருக்காருடா போயிட்டு வந்திடரேன் கொஞ்சம் அட்டெனன்ஸை கவனிச்சிக்கோங்ககடா என்று தன் அறை தோழர்களிடம் கூறிவிட்டு உற்சாகமாய் கிளம்பினான் வினோத்.

என்னப்பா இன்னும் பைக்கே வாங்கல அதுக்குள்ள ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு கூட்டிட்டு வந்திருக்க.
மொதல்ல இந்த ரிஜிஸ்டர முடிச்சிட்டு உனக்கு பைக் வாங்கலாம்டா.
இங்க என்னப்பா ரிஜிஸ்டர்! என்று கேட்டவனிடம் சற்று தயக்கத்தோட ஆரம்பித்தார், அது ஒன்னுமில்லப்பா எனக்கும் வயசாகுது உங்கம்மாவாளையும் எந்த வேலையையும் செய்ய முடியல இனிமே எதுக்கு இந்த காடு, கழனி தோட்டமெல்லாம் அதான் அத வித்துடலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்டா, நம்ம பழனிதான் மெட்ராஸ் பார்ட்டி ஒருத்தர்கிட்ட மூனு லட்சம் விலை பேசி முடிச்சிருக்காரு.

அதெல்லாம் சரிதான்ப்பா ஆனா நம்மூராளுங்களாலயே அதுல ஒழுங்க விவசாயம் செஞ்சு நல்ல விளைச்சல பாக்க முடியல, இதுல எப்படிப்பா மெட்ராஸ்காரங்க வந்து விவசாயம் செய்யப்போராங்க ஆச்சர்யத்துடன் கேட்டான் வினோத்.

வாங்க தம்பி எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க பழனியின் குரல் கேட்டுதிரும்பினான். நல்லாயிருக்கேன் மாமா, காலைலதான் வந்தேன். என்ன மாமா அப்பா எதோ நிலத்த விக்கபோறதா சொல்றாரு, ஆமாம் தம்பி நல்ல விலை நல்ல பார்ட்டி ரிஜிஸ்டர் ஆனவுடனே செட்டில்மென்ட் அதான் தம்பி முடிச்சி கொடுத்துட்டேன்.

அது சரி மாமா மெட்ராஸ்காரங்க இங்க வந்து எப்படி விவசாயம் பாக்க போறங்க.

நல்லா கேட்டீங்க போங்க, அவங்க ஏன் இங்க வந்து விவசாயம் பண்ண போறாங்க.

அப்புறம்.

உங்க மூனு ஏக்கர சேர்த்து மொத்தம் அறுபது ஏக்கர வாங்கி அத 200 ப்ளாட்டா போட்டு விக்க போறாங்க என்று கூறிய பழனியை பாம்பை பார்த்த கீறியைப்போல பார்த்தான்.

சோறு போடுற நிலத்த எப்படிங்க ப்ளாட்டு போட்டு விக்கிறதுக்கு கொடுக்கிறது என்றான் மெல்லிய குரலில்.

எங்க சோறு போடுது அதுலாம் அந்த காலம் ஒழங்கா மழை பெஞ்சே பல வருஷம் ஆகுது,

இந்த வருஷம் பெய்யலைனா அடுத்த வருஷம் பெய்யும்.

இந்த மாதிரிதான் மூனு வருஷமா ஓடிடுச்சு.

சரி இப்போ என்ன பண்ண சொல்றீங்க.

தம்பி நல்ல விலை வந்திருக்கு கொடுத்திடுங்க.

அது முடியாதுங்க.

இப்படி எடுத்தேன் கவுத்தேனு பேசினா எப்படி, இன்னும் கொஞ்சம் பணம் வேணும்னா கேளுங்க பார்ட்டிகிட்ட பேசி முடிச்சி தறேன், நீங்க ஆச பட்ட மாதிரி ஒரு நல்ல டூ வீலர் வாங்கிக்கோங்க, படிக்கறதுக்கு பேங்க்ல லோன் தரலைனு போன வருஷம் எங்கிட்ட சொல்லி வருத்த பட்டீங்கல்ல, இந்த வருஷம் நீங்களே ரெண்டு மூனு பேருக்கு லோன் தரலாம் மறுபடியும் மூளை சலவையை ஆரம்பித்தான் பழனி, அம்மாவுக்கு நகை, உனக்கு மேல் படிப்புக்கு பணமுமாச்சு. போதும் நிறுத்துங்க என்ற கத்திய வினோத்தின் மீது ரிஜிஸ்டர் ஆபீஸிலிருந்த அனைவரும் பார்வையும் விழுந்தது.

ப்ளாட் போட்டு விக்கிறதாயிருந்தா எங்க நிலத்தை நாங்க கொடுக்கிறதாயில்ல.

உங்க மூனு ஏக்கர் நிலமும் ஒரு ஒரமாயிருந்திருந்தா நான் உங்கிட்ட இவ்ளோ நேரம் பேசியிருக்கமாட்டேன் அது நடுவுல வந்து மாட்டியிருக்கு,அதனாலதான் சொல்றேன் மொத்தமா அஞ்சு லட்சம் கொடுக்கறேன் கொடுத்திடு பழனியின் பேச்சில் தொனி மாறியது.

இப்படி எல்லா விளை நிலங்களையும் ப்ளாட் போட்டு வித்துவித்துதான் நெற்களஞ்சியமா இருந்த தமிழ்நாடு நல்ல அரிசிக்கு இப்போ அடுத்த மாநிலத்துகிட்ட பிச்சை கேக்கவேண்டிய நிலமை வந்திருக்கு என்னோட மூனு ஏக்கர் நிலத்தினால ஒரு அறுபது ஏக்கர் நிலம் காப்பாத்தப்படும்னா நான் என்னோட மூனு ஏக்கர விக்கபோறதில்லை என்று கூறி தன் பல்சர் கனவை கலைத்துவிட்டு கிளம்பினான் வினோத்.

ஜூன் 30, 2010

குமுறல்கள் - பிரிவினைவாதம்

ஏன் தமிழர்களுக்கு மட்டும் எப்பயும் பிரச்சனையாகவே இருக்கிறது. உலகத்தில இருக்கிற மத்தவங்களாம் ஃபுட்பால் கோலாகலம், ஆசியா கோப்பைனு எஞ்சாய் பன்னிட்டு இருக்கும் போது நாம மட்டும் ஏன் எப்பயும் எழவு விழுந்த வீட்ட போல இருக்கோம்.

இதுக்கெல்லாம் என்ன காரணம்னு பார்த்தால் பிரிவினை தான்னு தோனுது. தமிழனோட பெரிய பிரச்சனை அவன் எப்பயும் தன்னை மத்தவங்களிடமிருந்து பிரித்துப்பார்ப்பதே.

சில வருஷங்களுக்கு முன்னால் வட இந்தியர்களை ஆரியர்னும் தங்களை திராவிடர்னும் பிரித்தான்,
அப்புறம் சில வருடம் கழித்து திராவிடர்/பார்ப்பனர் என்று மீண்டும் ஒரு பிரிவினை இதுல தமிழ் நாட்டிலயே
ஒரு க்ரூப்ப தனியாக கழட்டிவிட்டனர்.

சில நாட்களுக்கு முன்னால ஒரு கூட்டம் நாங்கள் இந்தியர்கள் அல்ல, திராவிடர்கள் என்று
இந்தியாவை தங்களிடமிருந்து பிரித்தனர். இப்போ இன்னொரு கூட்டம் திராவிடர்கள்னா தென்னிந்தியாவில இருக்கிற மத்த மூனு மாநிலத்தவரும் சேர்ந்திடுவாங்களே, நாம எப்போ அடுத்தவங்கள நம்ம கூட சேர்த்திருக்கோம்னு அதையும் பிரித்து நாம் திராவிடர்கள் இல்லை தமிழர்கள் என்று கூறி தங்களை மற்ற இந்தியர்களிடமிருந்து முழுதும் பிரித்து கொண்டார்கள்.

இனியும் அந்த மாதிரி கூட்டத்தோட சோத்து பிழப்பு தீரலைனா வேற ஏதாவது சொல்லி பிரிக்க வேண்டியதுதான், நம்ம மக்கள்ளயும் ஒரு நாலு பேரு எவனோ புதுசா எதையோ சொல்றானு அவன் பின்னாடி போகவேண்டியது.

தமிழன் மட்டுமில்ல எல்லா மொழிக்காரனும், எல்லா நாட்டுக்காரனும் தான் பிரிக்கிறான், ஆனா அவங்களோட பிரிவினைக்கு ஒரு எல்லை வைத்திருப்பார்கள் யாரை பிரிக்கலாம், யாரை சேர்க்கலாம்னு ஒரு வரையறை வச்சிருப்பாங்க. ஆன நம்மாளுங்க யார்ரெல்லாம் நமக்கு பிடிக்கலையோ அவங்களை எல்லாம் பிரிச்சிடுவாங்க, உதாரணத்திக்கு திராவிடத்தை, தமிழர்களிடமிருந்து பிரித்தது, சிவனை ஆரியக்கடவுள் என்றும், முருகனை தமிழ்க்கடவுள் என்றும் பிரித்தது போன்ற பல.

இப்படி எல்லாத்தையும் தம்மிடமிருந்து பிரித்துவிட்டு தமிழர்களுக்கென்று எதுவும் இல்லைனு போரட்டம் பன்றது, இதையெல்லாம் தினமும் பார்த்து,பார்த்து ஒரு சராசரி தமிழனுக்கு/திராவிடனுக்கு/ஆரியனுக்கு புளித்து விட்டது. இது எதுவுமே தனக்கு தேவையில்லைனு தானும், தன் குடும்பமுமே
போதும்னு சத்தமில்லாமா பலர் செட்டிலாக தொடங்கி விட்டனர். பிரிவினைவாதம் செய்கின்ற கூட்டம் இருக்கிற வரைக்கும் தமிழ்நாடு உருப்படாது, தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் இருக்கிற வரைக்கும் இந்தியா முன்னேறாது.