ஜூலை 16, 2010

விளை(லை) நிலம்

எல்லாரும் சரின்னு சொல்லிட்டாங்க சுப்புரமணி இனி நீதான் பாக்கி, எல்லாரும் கொடுத்ததுக்கபுறம் நீ மட்டும் நடுவில அந்த மூனு ஏக்கர வச்சு என்ன பண்ண போற சரின்னு சொல்லு ஒரு நல்ல விலைக்கு முடிச்சிடலாம் என்ற ப்ரோக்கர் பழனியின் பேச்சில் சற்றே தடுமாறினான் சுப்புரமணி. பரம்பரை பரம்பரையா சோறு போட்ட நிலமாச்சே அத போய் எப்படிய்யா கொடுக்கறது தயங்கிய படியே கேட்டாள் சுப்புரமணியின் மனைவி கண்ணம்மா.

இதப்பாரு கண்ணம்மா உனக்கு தெரியாதது ஒன்னுமில்ல, மூனு வருஷமா மழை இல்ல, கினத்திலயும் தண்ணி வத்தி போய் பல காலம் ஆகுது இந்த நிலமையில இந்த நிலம் உனக்கு சோறு போடும்னு நீ இன்னும் நினைக்கிறியா. உம்பையனும் மெட்ராஸ்ல ஏதோ கம்பியூட்டருக்கு படிக்கிறான் அவன் காலத்துல அவன் இந்த பட்டிகாட்டுக்கு வந்து நிலத்த உழுது விவசாயம் பண்ணபோறானா? உங்க காலத்துக்கப்புறம் இத பாத்துகிறதுக்கு ஆளில்லை. இப்பவே வந்த விலைக்கு இத வித்துட்டு உன் பையன் படிப்பு செலவுக்கு நீ வாங்கின கடன அடைச்சிட்டு மீதி இருக்கிற காசுல நீங்க நிம்மதியா வாழலாம். பழனி கூறுவதில் உண்மை இருப்பதாகவே அவர்களுக்கு பட்டது.

என்ன இருந்தாலும் இது பரம்பரை சொத்து எதுக்கும் என் பையன்கிட்ட ஒரு வார்த்தை என இழுக்கும்போதே பழனி குறுக்கிட்டான், உன் பையன் என்னையா சொல்ல போறான் அவன் படிச்சி முடிச்சதும் ஏதாவது ஒரு வெளிநாட்டு கம்பெனில வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள் வேலை செஞ்சிட்டு அப்புறம் வெளி நாட்டுக்கே போய் செட்டில ஆகிடபோறான் அவனுக்கு இந்த நிலத்த கொடுக்கிறதால எந்த வருத்தமும் இருக்காது. மீண்டும் ஏதோ பேச முயன்றவனை தடுத்து, முழுசா மூனு லட்சத்துக்கு முடிச்சி தறேன் போதுமாய்யா என்று மூளை சலவையை முடித்தான். சில ஆயிரங்களை எதிர்பார்த்தவனுக்கு பல லட்சம் கிடைக்க போவதை என்னி முழு மனதோடு சம்மதித்தான்.

வர வெள்ளிக்கிழமை ரிஜிஸ்டர் வச்சிருக்கேன், அன்னிக்கு பாபனாசம் ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு 10 மணிக்கெல்லாம் வந்திடு, அப்புறம் உன் பையனையும் வர சொல்லிடு பரம்பரை சொத்து அவனும் கையெழுத்து போடனும் இல்லைனா வில்லங்கமாகிடும், சரி இத செலவுக்கு வச்சுக்கோ என்று ஒரு நூறு ரூபாய் தாளை கையில் திணித்து விட்டு கிளம்பினான் பழனி.

ஹலோ வினோத்து நா அப்பா பேசுறேன் டா, எப்படி இருக்க.
நான் நல்லா இருக்கேன் பா, நீங்களும் அம்மாவும் எப்படி இருக்கீங்க.

நாங்க நல்லா இருக்கோம் டா, நீ ரொம்ப நாளா பைக் வேனும்னு கேட்டுட்டிருந்தியே கைல கொஞ்சம் பணம் வந்திருக்கு, வர வெள்ளிக்கிழமை நல்ல நாளு, அன்னிக்கே ஒரு நல்ல பைக்கா பார்த்து எடுத்திடலாம்.
சரிப்பா நான் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்திடறேன்பா.

எப்படியோ பையனை வெள்ளிக்கிழமை ஊருக்கு வர சம்மதிக்க வச்சிட்டோம், அவன் போகும்போது சொன்ன மாதிரியே அவனுக்கு ஒரு பைக் வாங்கி கொடுக்கனும் என்று சுப்புரமணியும், பல்சர் 150cc கனவுகளோடு வினோத்தும் போனை துண்டித்தனர்

மச்சி அப்பா ஊருக்கு வர சொல்லியிருக்காருடா போயிட்டு வந்திடரேன் கொஞ்சம் அட்டெனன்ஸை கவனிச்சிக்கோங்ககடா என்று தன் அறை தோழர்களிடம் கூறிவிட்டு உற்சாகமாய் கிளம்பினான் வினோத்.

என்னப்பா இன்னும் பைக்கே வாங்கல அதுக்குள்ள ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு கூட்டிட்டு வந்திருக்க.
மொதல்ல இந்த ரிஜிஸ்டர முடிச்சிட்டு உனக்கு பைக் வாங்கலாம்டா.
இங்க என்னப்பா ரிஜிஸ்டர்! என்று கேட்டவனிடம் சற்று தயக்கத்தோட ஆரம்பித்தார், அது ஒன்னுமில்லப்பா எனக்கும் வயசாகுது உங்கம்மாவாளையும் எந்த வேலையையும் செய்ய முடியல இனிமே எதுக்கு இந்த காடு, கழனி தோட்டமெல்லாம் அதான் அத வித்துடலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்டா, நம்ம பழனிதான் மெட்ராஸ் பார்ட்டி ஒருத்தர்கிட்ட மூனு லட்சம் விலை பேசி முடிச்சிருக்காரு.

அதெல்லாம் சரிதான்ப்பா ஆனா நம்மூராளுங்களாலயே அதுல ஒழுங்க விவசாயம் செஞ்சு நல்ல விளைச்சல பாக்க முடியல, இதுல எப்படிப்பா மெட்ராஸ்காரங்க வந்து விவசாயம் செய்யப்போராங்க ஆச்சர்யத்துடன் கேட்டான் வினோத்.

வாங்க தம்பி எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க பழனியின் குரல் கேட்டுதிரும்பினான். நல்லாயிருக்கேன் மாமா, காலைலதான் வந்தேன். என்ன மாமா அப்பா எதோ நிலத்த விக்கபோறதா சொல்றாரு, ஆமாம் தம்பி நல்ல விலை நல்ல பார்ட்டி ரிஜிஸ்டர் ஆனவுடனே செட்டில்மென்ட் அதான் தம்பி முடிச்சி கொடுத்துட்டேன்.

அது சரி மாமா மெட்ராஸ்காரங்க இங்க வந்து எப்படி விவசாயம் பாக்க போறங்க.

நல்லா கேட்டீங்க போங்க, அவங்க ஏன் இங்க வந்து விவசாயம் பண்ண போறாங்க.

அப்புறம்.

உங்க மூனு ஏக்கர சேர்த்து மொத்தம் அறுபது ஏக்கர வாங்கி அத 200 ப்ளாட்டா போட்டு விக்க போறாங்க என்று கூறிய பழனியை பாம்பை பார்த்த கீறியைப்போல பார்த்தான்.

சோறு போடுற நிலத்த எப்படிங்க ப்ளாட்டு போட்டு விக்கிறதுக்கு கொடுக்கிறது என்றான் மெல்லிய குரலில்.

எங்க சோறு போடுது அதுலாம் அந்த காலம் ஒழங்கா மழை பெஞ்சே பல வருஷம் ஆகுது,

இந்த வருஷம் பெய்யலைனா அடுத்த வருஷம் பெய்யும்.

இந்த மாதிரிதான் மூனு வருஷமா ஓடிடுச்சு.

சரி இப்போ என்ன பண்ண சொல்றீங்க.

தம்பி நல்ல விலை வந்திருக்கு கொடுத்திடுங்க.

அது முடியாதுங்க.

இப்படி எடுத்தேன் கவுத்தேனு பேசினா எப்படி, இன்னும் கொஞ்சம் பணம் வேணும்னா கேளுங்க பார்ட்டிகிட்ட பேசி முடிச்சி தறேன், நீங்க ஆச பட்ட மாதிரி ஒரு நல்ல டூ வீலர் வாங்கிக்கோங்க, படிக்கறதுக்கு பேங்க்ல லோன் தரலைனு போன வருஷம் எங்கிட்ட சொல்லி வருத்த பட்டீங்கல்ல, இந்த வருஷம் நீங்களே ரெண்டு மூனு பேருக்கு லோன் தரலாம் மறுபடியும் மூளை சலவையை ஆரம்பித்தான் பழனி, அம்மாவுக்கு நகை, உனக்கு மேல் படிப்புக்கு பணமுமாச்சு. போதும் நிறுத்துங்க என்ற கத்திய வினோத்தின் மீது ரிஜிஸ்டர் ஆபீஸிலிருந்த அனைவரும் பார்வையும் விழுந்தது.

ப்ளாட் போட்டு விக்கிறதாயிருந்தா எங்க நிலத்தை நாங்க கொடுக்கிறதாயில்ல.

உங்க மூனு ஏக்கர் நிலமும் ஒரு ஒரமாயிருந்திருந்தா நான் உங்கிட்ட இவ்ளோ நேரம் பேசியிருக்கமாட்டேன் அது நடுவுல வந்து மாட்டியிருக்கு,அதனாலதான் சொல்றேன் மொத்தமா அஞ்சு லட்சம் கொடுக்கறேன் கொடுத்திடு பழனியின் பேச்சில் தொனி மாறியது.

இப்படி எல்லா விளை நிலங்களையும் ப்ளாட் போட்டு வித்துவித்துதான் நெற்களஞ்சியமா இருந்த தமிழ்நாடு நல்ல அரிசிக்கு இப்போ அடுத்த மாநிலத்துகிட்ட பிச்சை கேக்கவேண்டிய நிலமை வந்திருக்கு என்னோட மூனு ஏக்கர் நிலத்தினால ஒரு அறுபது ஏக்கர் நிலம் காப்பாத்தப்படும்னா நான் என்னோட மூனு ஏக்கர விக்கபோறதில்லை என்று கூறி தன் பல்சர் கனவை கலைத்துவிட்டு கிளம்பினான் வினோத்.

4 கருத்துகள்: